சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் 18-ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனே தரிசனம் முடித்து திரும்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதாலும், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையிலும் சாமி தரிசனத்தில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்பாட் புக்கிங்கில் தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில் தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் வீரர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பியுள்ளது. வருடாந்திர மண்டல-மகரவிளக்கு உற்சவ காலத்தையொட்டி நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் திரண்டதால், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்வம் அதிகாரிகளும், போலீசாரும் திணறி வருகின்றனா். அடிவாரமான பம்பையில் இருந்து சன்னிதானம் வரையான மலைப் பாதைகளில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பல மணி நேரம் தாமதத்துடன் பக்தா்கள் மலையேறி, தரிசனம் செய்யும் நிலை உள்ளது.கடந்த ஆண்டு 4 வெவ்வேறு நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.
ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாள்களிலேயே சுமாா் 2 லட்சம் பக்தா்கள் யாத்திரைக்கு வந்துள்ளனர். பக்தா்கள் பதினெட்டாம்படியில் சீராக ஏறவும், யாரும் வரிசையைத் தாண்டி முன்னால் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பம்பையில் பக்தா்கள் கூட்டத்தைக் குறைக்கவும், அவா்கள் பல மணி நேரம் காத்திருக்காமல் விரைவாக யாத்திரையை முடிக்கவும் நிலக்கல் பகுதியிலேயே பக்தா்களின் வருகையைக் கட்டுப்படுத்த தேவஸ்வம் வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அதன்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர், தேவையான உபகரணங்களுடன் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.