பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

Continues below advertisement

ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடக்கும் இந்த மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

தற்போது கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது, தினமும் 90,000 பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சபரிமலையில்  நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்றனர். கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி ஐயப்ப பக்தர் ஒருவர்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பக்தர் கூட்ட நெரிசலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பம்பாவிலிருந்து ஆம்புலன்சுக்கு எந்த உதவியும் கிடைக்காததால் பம்பாவிலிருந்து பத்தனம்திட்டாவிற்கு அனுப்பப்பட்டனர். பத்தனம்திட்டாவிலும் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில், சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ரவாடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நவம்பர் 17ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததாக டிஜிபி தெளிவுபடுத்தினார். வெர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்த நாளிலேயே பக்தர்கள் வர வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

சபரிமலையில் போதுமான காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளனர். திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததே பிரச்சனைக்கு காரணம் என்றும் 5,000 பேருந்துகள் வந்ததாகவும், வந்தவர்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்டதாகவும் டிஜிபி கூறினார். வழக்கமாக முதல் நாட்களில் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கூட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.