சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஸ்பாட் முன்பதிவு டோக்கன்களை கூட்டத்திற்கு ஏற்றவாறு குறைத்தும், அதிகரித்தும் வருகிறது.

Continues below advertisement

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் அறுபடை முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுவது போலவே, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணைப் பாயாசம் மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஐயப்பன் பிரசாதத்தை வாங்க சபரிமலைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. அதாவது இருக்கும் இடத்திலிருந்தே தபால் அலுவலகங்கள் மூலம் ஆர்டர் செய்தால்,  நமது வீட்டிற்கே சபரிமலையில் இருந்து அரவணை பிரசாதம் வந்து சேரும். இதற்காக தபால் துறையுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒன்றிணைந்து செயல்படுகிறது.

Continues below advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தே அரவணை பிரசாதத்தை வாங்குவதற்கு சபரிமலையில் உள்ள தபால் துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சபரிமலை ஐயப்பன் பிரசாதத்தை வாங்க முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சபரிமலை தபால் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் சபரிமலை பிரசாதத்தை கொண்டு சேர்ப்பதே எங்களது இலக்கு. இதற்காக வீட்டிற்கே பிரசாதத்தை டெலிவரி செய்யும் திட்டத்தில் தபால் துறை இறங்கியுள்ளது. இந்தப் பிரசாதத்தில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அரச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கும்.

ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ரூ.520-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதே போல் 4 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.960 மற்றும் 10 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.1,760-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். தபால் நிலையங்களில் பிரசாதம் வேண்டி பணம் செலுத்தினால், அடுத்த சில தினங்களில் சபரிமலை ஐயப்பன் பிரசாதம் உங்கள் வீடு தேடி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கு பூஜை தொடங்கி, முடியும் வரை மட்டுமே சபரிமலையில் உள்ள தபால் நிலையம் திறந்திருக்கும். அதன்பிறகு தபால் நிலையம் பூட்டப்பட்டு தபால் முத்திரைகள் பம்பையில் பத்திரமாக வைக்கப்படும். இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கு அடுத்து தனி பின்கோடு (689713) இருப்பது சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் தான். ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜை தொடங்கியதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் வருகின்றன. பக்தர்களின் கடிதங்களை ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜிப்பது வழக்கம். இங்கிருக்கும் தபால் நிலையம் மூலமாகவே தற்போது ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதமும் வீட்டிற்கே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.