நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தங்களின் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

Continues below advertisement

ரத்து செய்யப்பட்ட விமானங்கள் - திணறிய பயணிகள்

இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு என்பது அளப்பறியது. நாடு முழுவதும் தினந்தோறும் அந்த நிறுவனத்தினை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு முனையங்களிலும் இருந்தும் விமான சேவை உள்ளதால் பெரும்பாலானோர் அதில் பயணிக்கின்றனர். இப்படியான நிலையில் சிவில் விமான போக்குவரத்துத்துறை கொண்டு டிஜிசிஏ விதிகளுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்க தடுமாறி வருகிறது.

இதில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய விமானிகள் மற்றும் விமான குழுவினரின் ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டது. இது குழப்பத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மன்னிப்பு கேட்ட இண்டிகோ

இதனிடையே அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோவின் நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகளில் பரவலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் அனைவருக்கும் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விமான சேவையின் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பொருட்டு  MOCA, DGCA, BCAS, AAI மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்களின் ஆதரவுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

கடந்த சில நாட்கள் உங்களில் பலருக்கு எவ்வளவு கடினமாக இருந்தன என்பதை நாங்கள் மிகவும் வருந்துகிறோம், புரிந்துகொள்கிறோம். இந்த பிரச்னை ஒரே இரவில் தீர்க்கப்படாது என்றாலும், விரைவில் அதனை முடிவுக்கு கொண்டு வர எங்களால் இயன்றதை செய்வோம்” என இண்டிகோ கூறியுள்ளது.

மேலும், “பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தங்களுடைய கட்டண தொகை முழுவதுமாக திருப்பி தரப்படும். மேலும் டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்யப்பட்டதற்கும், வேறு நாளில் மாற்றியதற்கும் எந்தவித கட்டணமும் விதிக்கப்படாமல் முழு விலக்கு அளிக்கப்படுகிறது” எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ”டிசம்பர் 5ம் தேதியான இன்று அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாளை முதல் எங்களுடைய பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்படும்” எனவும் கூறப்பட்டிருக்கிறது. 

விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தால், பயணிகள் விமான நிலையங்களுக்கு வர வேண்டாம். அதேபோல் இண்டிகோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புக்கொண்டு பலர் காத்துக்கிடந்த நிலையில் பதிலளிக்க முடியாமல் இருந்ததை ஒப்புக்கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் எங்கள் மீது நீங்கள் பொழிந்த நம்பிக்கையையும் அன்பையும் மீண்டும் பெற நாங்கள் அனைத்தையும் செய்வோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.