கார்த்திகை மாதம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். கார்த்திகை முதல் தேதி அன்றே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பு அல்லது காவி நிற உடை உடுத்தி, துளசி மணி மாலை அணிந்து, விரதத்தை துவக்கி விடுவார்கள். கார்த்திகை முதல் நாளில் விரதத்தை துவங்கி, தொடர்ந்து 41 நாட்கள் ஐயப்ப பக்தர்கள் மண்டல விரதம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டும் சபரிமலை யாத்திரைக்கான ஏற்பாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்து வருகிறது.

Continues below advertisement

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி திங்கள்கிழமை பிறக்கிறது. மிக விசேஷமாக இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாள் சோமவார பிரதோஷ தினமாக அமைந்துள்ளது. சிவ பெருமானுக்குரிய பிரதோஷ நாளில், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்குவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் சுவாமி ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து கொள்வதால் ஐயப்பனின் அருளும், சிவபெருமானின் அருளும் சேர்ந்தே கிடைக்கும்.

கார்த்திகை முதல் தேதி பிரதோஷ தினத்தில் வருவதால் அன்று எப்போது வேண்டுமானாலும் மாலை அணிந்து, விரதத்தை துவங்கலாம். இருந்தாலும் ராகு காலம், எம கண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் மாலை அணிந்து கொள்வது சிறப்பு. அன்று திங்கள்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரை ராகு காலமும், காலை 10.30 முதல் பகல் 12 வரை எமகண்டமும் உள்ளது. இந்த நேரங்களை தவிர்த்து விட்டு, மற்ற நேரத்தில் மாலை அணிந்து கொள்ளலாம்.

கார்த்திகை மாதம் சுவாமி ஐயப்பனுக்கு மட்டுமின்றி, முருகப் பெருமான் மற்றும் சிவபெருமானுக்கும் ஏற்ற மாதமாகும். அதனால் திருக்கார்த்திகை தீபத்திற்காக விரதம் இருப்பவர்களும் கார்த்திகை முதல் நாளில் விரதத்தை துவக்கலாம். ஆன்மீகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் கார்த்திகை மாதம் தீப வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்து, லிங்கோத்பவராக வெளிப்பட்ட மாதம் என்பதால் கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனுக்கு நடத்தப்படும் சங்காபிஷேகம் மிகவும் சிறப்புக்குரியதாகும். இது தவிர கார்த்திகை மாதத்தில் சிவனுக்கு நெய் அபிஷேகம் செய்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழிபடுவது சிறப்பு. மகாலட்சுமி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அந்த வகையில் மகாலட்சுமி, தீபத்தின் சுடரில் வாசம் செய்யும் மாதமே கார்த்திகை மாதமாகும்.