ரயில் பயணமும் கட்டுப்பாடும்

நாளுக்கு நாள் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தாலும் ரயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அடிப்படை வசதிகளும் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவே ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களாக உள்ளனர். இந்த நிலையில்  ரயில் பயணத்தை மக்களுக்குப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வழங்க ரயில்வேத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அந்த வகையில் ரயில்களில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு கொண்டு செல்ல முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மது அருந்தி விட்டு ரயிலில்  பயணிக்கலாமா.?

அதிலும் தற்போது ரயில்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாக இருந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் ஒரு சில ரயில்களில் மது அருந்திவிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேற்றி வருகிறது. ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ மது அருந்திவிட்டு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது ரயில்வே அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 145-ன் படி, ரயிலில் அல்லது ரயில் நிலைய வளாகத்தில் குடிபோதையில் இருப்பதும், அநாகரீகமாக நடந்து கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. மது அருந்திவிட்டு பயணிகளுக்கு தொந்தரவு செய்வது கடுமையான குற்றம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தண்டனைகள் என்ன.?

மது அருந்திவிட்டு ரயில்களில் அல்லது ரயில் நிலையத்தில் முதல் முறையாக குற்றம் செய்யும் குற்றவாளிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை தண்டனை அல்லது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றங்களை பொறுத்து  இரண்டு தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்ததாக ரயிலில் மது போதையில் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களை தாக்கினாலோ 6 மாதம் சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது. 

Continues below advertisement

எனவே ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் மனதில் வைக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக ரயில் அல்லது நடைமேடையில் மது அருந்துவது,  குடிபோதையில் ரயிலில் ஏறுவது, சண்டையிடுதல் மற்றும் சத்தமாக பேசி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய ரயில்வே போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. எனவே ரயில்களில் பயணிக்கும் போது மது அருந்திவிட்டு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் அறிவுறுத்தலாக உள்ளது.