சபரிமலை பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் தடை விதித்தது. திட்டத்துக்கு தேவைப்படும் குறைந்தபட்ச நில அளவை மதிப்பீடு செய்ய மாநில அரசு தவறிவிட்டதாக கூறி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஐயப்பனை காண தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருடம் தோறும் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். தற்போது பம்பை, எரிமேலி வழியாக சபரிமலைக்கு செல்லலாம். கேரளாவுக்கு சென்றதும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வனப் பகுதிகளுக்கு நடுவே சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இதற்காக பல இடங்களில் நிலம் பார்க்கப்பட்டு தற்போது எரிமேலியில் சுமார் 2400 ஏக்கர் பரப்பளவில் கிரீன் பீல்ட் சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கேரள அரசு தயார் செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளது.
குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செறுவள்ளி எஸ்டேட் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க 2,570 ஏக்கா் நிலமும் அதற்கு வெளிப்புறத்தில் 307 ஏக்கா் நிலமும் கையகப்படுத்த 2022, டிசம்பர் 30-ஆம் தேதி கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து அயானா அறக்கட்டளை சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் சமூக தாக்க மதிப்பீடு (எஸ்ஐஏ) அறிக்கை, நிபுணா் குழு பரிந்துரை, மாநில அரசு உத்தரவு மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமன இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013 என இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் மனுதாரா்கள் குறிப்பிட்டனா். இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.ஜெயசந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.