2026 ஜனவரி 1-ம் தேதி முதல், புதிய தரப் பரிசோதனை விதிகளை, பாட்டில்கள், கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயம் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை குறித்து தற்போது பார்க்கலாம்.
BIS சான்றிதழுக்கு பதிலாக புதிய தரப் பரிசோதனை முறை
இந்தியாவில் தற்போது, பாட்டில்கள் மற்றும் கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பிடம் பி.ஐ.எஸ்.,(BIS) சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையிடம் இருந்து விற்பனைக்கான உரிமத்தை பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு, பி.ஐ.எஸ்., சான்றிதழ் கட்டாயம் என்பதை நீக்கியதோடு, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், மினரல் வாட்டர் ஆகியவற்றை, அதிக ஆபத்துமிக்க தயாரிப்பு பிரிவாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,(FSSAI) வகைப்படுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட உத்தரவில், பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப் பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயமாகிறது எனவும் கூறியுள்ளது.
புதிய விதிமுறை என்ன சொல்கிறது.?
இந்திய சந்தைகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடிநீரின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள தாதுப் பொருட்களின் அளவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ளது. அதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடுகளை, மாதம் ஒருமுறை கட்டாயம் பரிசோதிப்பதோடு, பிற அளவீடுகளை, 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது.
மேலும், உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 2 ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்களை பெறத் தேவையில்லை என்ற அரசின் உத்தரவுக்கு இணங்க, பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, குடிநீர் நிறுவனங்கள், இனி எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் மட்டும் பெற்றால் போதுமானது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குடிநீருக்கு உரிமம் பெறுவது எளிதாக்கப்பட்டாலும், தரக் கட்டுப்பாட்டில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. இதன் மூலம், இனி குடிநீர் ஆலைகளில் கூடுதல் கண்காணிப்பும், கடுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.
உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன.?
- குடிநீரில் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுயிரிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ஆய்வக சோதனை செய்ய வேண்டும்.
- தண்ணீரில் கதிர்வீச்சு துகள்கள்(Radioactive residues) கண்டறியப்பட்டால், அந்த நீர் ஆதாரத்தை பயன்படுத்துவது உடனடியாக தடை செய்யப்படும்.
- விற்பனைக்கு சென்ற பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவிடப்படும்.
- நிலத்தடி நீர் அல்லது பயன்படுத்தப்படும் மூல நீரை(Raw water), அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும்.
- குடிநீர் ஆலைகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு(Auditing) உட்படுத்தப்படுவதுடன், திடீர் சோதனைகளும் நடத்தப்படும்.