நிர்மலா சீதாராமன் விளக்கம்:


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று மக்களவையில் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது, “ஒவ்வொரு நாணயத்துக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. டாலர் - ரூபாய் இடையேயான மதிப்பில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள அந்நிய செலாவணி கையிருப்பை பயன்படுத்தியுள்ளது” என்றார்.





”எதிர்க்கட்சியினருக்கு பொறாமை”


 “நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருவதைக் கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.  ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள்” எனக் கூறினார்.


எழுத்துப்பூர்வ பதில்:


நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மற்றொரு பதிலில்,  “அக்டோபர் 20, 2022 அன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று விகிதம் ஒரு டாலருக்கு ரூ.83.20 ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.  சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆக்கிரமிப்பு நாணயக் கொள்கை இறுக்கம் ஆகியவற்றுடன்,  கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பும் தீவிரமடைந்ததால், நிதியாண்டில் (நவம்பர் 30, 2022 வரை) அமெரிக்க டாலர் 7.8 சதவீதம் வலுவடைந்தது. அதே காலகட்டத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 6.9 சதவீதம் குறைந்துள்ளது” என, நிர்மல சீதாராமான் விளக்கமளித்துள்ளார்.


காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு:


முன்னதாக கேள்வி நேரத்தில் பேசிய தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ரெட்டி, இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். நிதியமைச்சர் தனது மொழியைப் பற்றி மோசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினார். தனது மொழி ஆளுமை திறமையாக இல்லாததாலும், நான் ஒரு சூத்திரன் என்பதாலும் நிதியமைச்சர் தன்னைப் பற்றி மோசமாகப் பேசினார் என, ஏ.ஆர்.ரெட்டி ஆவேசமடைந்தார். அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்கள் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் இங்கு வருவதில்லை என விளக்கமளித்தார்.