அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பானது 82 ரூபாயை தாண்டி வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதர நாடுகளின் கரன்சிகள் சரியத் தொடங்கியுள்ளது.




டாலர் மதிப்பு உயர்வதற்கான காரணம்:


உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் மத்திய வங்கி, பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறினர். வெளியேறியதற்கான காரணமாக பங்குச் சந்தைகளை விட, அமெரிக்க வங்கியில் பணம் வைத்தால் ஆதாயம் அதிகம் என்பதால்தான். 


டாலர் மதிப்பு எப்படி உயர்ந்தது:


அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறியதன் காரணமாக, டாலர் கரன்சிகள், இந்தியாவை விட்டுச் சென்றன. இதனால் இந்தியாவுக்கு டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சந்தையில் தக்காளி வரத்து குறைந்தால் விலை உயர்கிறது, அதேபோன்றுதான் டாலரின் மதிப்பும் உயர்ந்தது.      


டாலர் மதிப்பு உயர்ந்தால், பாதிப்பு என்ன?


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், பெரும்பாலும் டாலரின் மதிப்பில்தான் வாங்குகிறோம். ஆகையால், டாலரின் மதிப்பு உயரும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயர தொடங்கியுள்ளது.


குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில், இந்தியா உலக அளவில் மூன்றாவது நாடாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சமையல் எண்ணெய் உள்ளிட்ட இதர இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மேலும், உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க, கச்சா எண்ணெய் கூட்டமைப்பான ஒபெக் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மேலும் கச்சா எண்ணெய் உயர்வில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.


பங்குச்சந்தை நிலவரம்:


வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  வெளியேறுவதை தொடர்ந்து பங்குச்சந்தை சரிவுடன் காணப்படுகிறது. இந்நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 30.81 புள்ளிகள் குறைந்து 58, 191.29 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 17. 15 புள்ளிகள் குறைந்து 17, 314 ஆக உள்ளது.





இன்றைய பங்குச்சந்தை முடிவில், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பானது 15 பைசாக்கள் மேலும் குறைந்து,  82.32 ரூபாயாக உள்ளது.