2022ஆம் ஆண்டின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. அதில், நாட்டில் `அரசியலமைப்பு, மதச் சுதந்திரம்’ என்ற பெயரில் `மதவெறி’ வளர்வதாகவும், `ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசு இயந்திரத்திற்குள் நுழைவதற்காக நீண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும்’ ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. `இந்த முயற்சிகளை முறியடிக்க மொத்த பலத்தையும் வெளிப்படுத்த வேண்டும்’ என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதவெறி தலைதூக்கி வருகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்களின் கொலைகள் இதன் உதாரணங்கள். இந்தக் கொலைகள் வகுப்புவாத சிந்தனை, பேரணி, போராட்டம், சமூக ஒழுக்க மீறல் முதலானவற்றை அரசியலமைப்பு மற்றும் மதச் சுதந்திரத்தின் பெயரால் மேற்கொண்டு, இதன்மூலம் சிறிய விவகாரங்களுக்காக வன்முறையைத் தூண்டுவதையும், சட்டவிரோத செயல்களை ஊக்குவிப்பதையும் வெளிப்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இந்த அறிக்கையில், `ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசு இயந்திரத்திற்குள் நுழைவதற்காக நீண்ட கால செயல்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. எண்களைப் பெருக்குவதன் அடிப்படையில், தங்கள் நோக்கத்தை அடைய எந்த வழிமுறையையும் பயன்படுத்த தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்கள் ஹிஜாப் உடை மீத விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படியான அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், தங்கள் ஓராண்டின் பணிகள், அடுத்தகட்ட திட்டங்கள் முதலானவற்றைப் பற்றி முடிவுகள் மேற்கொள்ள அகில பாரதிய பிரதிநிதி சபா என்ற பெயரில் கூட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர்களும், மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
தங்கள் ஆண்டு அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதமாற்ற விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது.
`பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் முதலான பகுதிகளில் இந்துக்களை மதமாற்றும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சவாலுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும், தற்போது மக்களைக் குழுக்களாக மதமாற்றுவதற்குப் புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்து சமூகத்தின் தலைமை தற்போது விழிப்பாக இருப்பது உண்மை என்ற போதும், இதனை எதிர்த்து திட்டமிட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் ஆகிறது’ என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமூகம் ஒருபக்கம் விழிப்புணர்வு பெற்று, சுயமரியாதையுடன் எழுந்து நின்றாலும், தனைப் பொருத்துக் கொள்ளாமல் சமூகத்தில் பதட்டமான சூழலை உருவாக்க முயல்வதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தல்களுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறை, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது முதலானவற்றைப் பற்றி, இந்த அறிக்கையில், `கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம், வங்காளத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசியல் விரோதம், மதவெறி ஆகியவற்றின் விளைவு ஆகும்’ எனவும், `விவசாயிகள் போராட்டம் என்ற போதும் மாண்புமிகு பிரதமரின் வாஅனத்தை நிறுத்த வைத்தது மிகவும் கண்டிக்கத்தக்க நிகழ்வு ஆகும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.