புனேயில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கௌசல்யா கரட் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு சுவாரசிய நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். மகாராஷ்டிர அரசில் அமைச்சராக இருந்தபோது, ​​ரத்தன் டாடாவை மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரவழைக்க உதவுமாறு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக கட்காரி கூறினார்.


டாடா கேள்வியும் கட்காரி விளக்கமும்


அந்த நிகழ்ச்சியை விவரித்த அவர், இந்த மருத்துவமனை இந்து சமுதாயத்திற்கு மட்டும் சேவை செய்யுமா அல்லது பாரபட்சமின்றி சேவை செய்யுமா என்று ரத்தன் டாடா தன்னிடம் கேட்டதாக கட்காரி நிகழ்வின்போது கூறினார். அதற்கு கட்கரி அளித்த பதில் இதுதானாம், ”ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மத அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதே இல்லை” என்றாராம். 






திறப்பு விழாவின் போது, ​​ரத்தன் டாடா தன்னிடம், "இந்த மருத்துவமனை இந்துக்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டார், அதற்கு நான் அவரிடம், "ஏன் அப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டேன், இது ஆர்எஸ்எஸ் மருத்துவமனை என ரத்தன் டாடா பதிலளித்தார். நான் அவரிடம் சொன்னேன்," இது அனைத்து சமூகத்துக்குமானது மற்றும் ஆர்எஸ்எஸ்ஸில் அப்படி எதுவும் மதப்பாகுபாடு இல்லை" என்று கட்கரி கூறினார்.






மேலும் நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.


"கல்வி மற்றும் சுகாதாரத் துறையில், நாட்டில் தேவையான வசதிகள் இல்லை. நகர்ப்புறத்தில் வசதிகள் இருந்தால், கிராமப்புறங்களின் நிலைமை நன்றாக இல்லை, குறிப்பாக கல்வியின் நிலைமை. ஆனால் வசதிகள் தற்போது மேம்பட்டு வருகின்றன." என்று அவர் சொன்னார்.


அவர் தான் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே அரசியல் செய்வதாகவும் 90 சதவிகிதம் சமூகப்பணி   மட்டுமே செய்வதாகவும் கூறினார்.