"எங்களுக்குள் சாதி மறுப்பு திருமணம்" ஆர்.எஸ்.எஸ் சொன்ன புது தகவல்!
'இந்து' என்று அடையாளம் காண்பது வெட்கக்கேடான விஷயமல்ல. மாறாக, அது பலருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக மாறிவிட்டது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் தாங்களே சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்து வருவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்"
பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபாவின் நிறைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, "பாபாசாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் (தற்போது இரண்டாக பிரிந்துவிட்டது) மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கொண்டு வந்தது. அதை, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்துவிட்டன.
வரலாற்றில் ஔரங்கசீப் பெரும் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோவை தலைவராக உருவாக்கவில்லை. இந்தியாவின் பண்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தலைவராக மாற்றப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் கருத்து என்ன?
முகலாயப் பேரரசர் அக்பரை எதிர்த்ததற்காக ராஜபுத்திர மன்னர் மகாராணா பிரதாப் போன்றவர்களை பாராட்டுகிறேன். இந்தியாவில் படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்களும் சுதந்திரப் போராளிகள்தான். படையெடுப்பு மனநிலை கொண்ட மக்கள், இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். இந்திய நெறிமுறைகளுடன் இருப்பவர்களுடன் நாம் துணை நிற்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் ஆர்.எஸ்.எஸ். அன்றாடம் கூறுவதில்லை. ஆனால், மக்கள் சில பிரச்னைகளை எழுப்பும் போதெல்லாம், பல்வேறு அமைப்புகளில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து உத்வேகம் பெற்று அதை எங்களிடம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்களில் விவாதிக்கப்படும் வழிமுறை எங்களிடம் உள்ளது" என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை ஆர்.எஸ்.எஸ். தனது சாதனையாகக் கருதுகிறதா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அந்த கோயில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் சாதனை.
'இந்து' என்று அடையாளம் காண்பது வெட்கக்கேடான விஷயமல்ல. மாறாக, அது பலருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இந்துவாக இருப்பது வெறும் மத அடையாளம் மட்டுமல்ல, தேசியவாதம், ஆன்மீகம் மற்றும் நாகரிகத்தின் வெளிப்பாடு. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலர் மத்தியில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது" என்றார்.