பாஜகவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை பாஜக தலைவர்கள் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், இந்தியா என்ற பெயரை எடுத்துவிட்டு பாரத் என பயன்படுத்த தொடங்கியுள்ளார். 


"இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்"


இந்த நிலையில், பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத், "இந்தியா என்ற பெயரை சொல்லி அழைப்பதை தவிருங்கள்" என தெரிவித்துள்ளார். 


அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் சகால் ஜெயின் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்ற பெயரை மக்கள் பயன்படுத்த வேண்டும். பாரதம் என்ற பெயர் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும்.


நம் நாட்டின் பெயர் காலம் காலமாக பாரதம் என அழைக்கப்பட்டு வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும் பெயர் அப்படியே இருக்கிறது.
இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் "பாரதம்" என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். நம் நாட்டை பாரதம் என்று அழைக்க மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.


"புதிய கல்விக் கொள்கை குழந்தைகளிடையே தேசபக்தி உணர்வு அதிகரிக்கும்"


இந்தியா அனைவரையும் ஒன்றிணைக்கும் நாடு. இன்று உலகிற்கு நாம் தேவை, நாம் இல்லாமல் உலகம் இயங்காது. யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம். இந்தியக் கல்வி முறையை ஆங்கிலேயர் மாற்றியமைத்தனர். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளிடையே தேசபக்தி உணர்வை அதிகரிக்கும் முயற்சியாகும்.


இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப விழுமியங்கள் குறித்து தங்களின் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்கு வலியுறுத்துகிறேன். செப்டம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாளை 'சர்வதேச மன்னிப்பு தினமாக' கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கிறேன்" என்றார்.


சமீபத்தில், சாதி குறித்து பேசிய மோகன் பகவத், "சமூக சமத்துவம் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அது பின்னர் மறக்கப்பட்டு மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்தது. வர்ணம் மற்றும் சாதி அமைப்பில் முதலில் பாகுபாடு இல்லை. அதனால், பயன்களே இருந்தன. இன்று யாராவது இந்த அமைப்புகளை பற்றிக் கேட்டால். அது கடந்தகாலம். அதை மறந்துவிடுவோம் என்றுதான் பதில் வரும்.


பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்தையும் பூட்டு போட்டு சேர்த்து வெளியேற்ற வேண்டும். முந்தைய தலைமுறையினர் எல்லா இடங்களிலும் தவறு செய்தனர். இந்தியா ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. 


நம் முன்னோர்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தாழ்ந்தவர்களாகி விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது நடக்காது. ஏனென்றால் அனைவரின் முன்னோர்களும் தவறு செய்துள்ளார்கள்" என்றார்.