பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 11,320 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர்.


ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நடக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த விதமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் உடன்படவில்லை.


தீவிரம் அடைந்த போர்:


போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த போதிலும், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தது. 


போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படிப்பட்ட சூழலில், காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்த சம்பவம், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வரும் மக்கள் தஞ்சம் புகுந்த மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


"சர்வதேச சட்ட விதிகளை பின்பற்றவேண்டும்"


இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இந்தியா, "சர்வதேச சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்" என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பாலஸ்தீன மக்களுக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை இந்தியா கவனித்து வருகிறது" என்றார்.


அல் ஷிபா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய அவர், "பிரச்னை ஒரு மருத்தவமனையில் நடப்பதோ அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையை பற்றியதோ அல்ல. அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமானச் சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும்.


மோதலில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஊக்குவிப்பதன் அவசியத்தை இந்தியா எப்போதும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிலைமையை தணிப்பதற்கான முயற்சிகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அதிகரித்து வரும் குடிமக்களின் இறப்பு எண்ணிக்கையில் அக்கறை கொண்டுள்ளோம்" என்றார்.