ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை குழுக்களாக பார்க்கவோ அல்லது அது தொடர்பான எதையும் சமூக ஊடக தளங்களில் பதிவிடவோ வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.


கல்லூரி டீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், போட்டியின் போது மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் இருக்குமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், துபாய் சர்வதேச மைதானத்தில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடந்து வருவது மாணவர்கள் அறிந்ததே. கல்வி நிறுவனம்/விடுதியில் எந்த விதமான ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தாமல், விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியின் போது, ​​மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் இருக்குமாறும், மற்ற மாணவர்கள் தங்கள் அறைகளுக்குள் நுழைந்து குழுக்களாக போட்டியைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஒரு குறிப்பிட்ட அறையில் போட்டியைக் காணும் மாணவர்கள் குழுவாக இருந்தால், அந்த குறிப்பிட்ட அறை எந்த மாணவருக்கு ஒதுக்கப்பட்டதோ அவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார், சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


மேலும், போட்டி தொடர்பான எந்தவொரு தகவலையும் சமூக ஊடக தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போட்டியின் போது அல்லது அதற்குப் பிறகு விடுதி அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


 






2016 ஆம் ஆண்டில், டி-20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வெளியூர் மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு இடையே கல்லூரியில் மோதல்கள் வெடித்தன, இதனால் என்ஐடி பல நாட்களுக்கு மூடப்பட்டது.


கடைசியாக நடைபெற்ற டி-20 உலக கோப்பை போட்டியில், இந்திய - பாகிஸ்தான் ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் வெற்றியை காஷ்மீர் மாணவர்கள் கொண்டாடியதாகக் கூறி அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.