உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வுக்குப் பின்னர் ஆயுள் முழுமைக்குமான வீட்டுப் பணியாளர், கார் ஓட்டுநர், ஒரு செயலக உதவியாளரை பெறுவார். இந்த திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றார். 49வது நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் ஓய்வுக்குப் பின்னர் அனுபவிக்கக் கூடிய சலுகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வுக்குப் பின்னர் ஆயுள் முழுமைக்குமான வீட்டுப் பணியாளர், கார் ஓட்டுநர், செயலக உதவியாளரை பெறுவார்.
இதுதொடர்பான புதிய உத்தரவு நேற்றுதான் (ஆக 27) வெளியாகியுள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை இதற்கான திருத்தங்களை அறிவித்துள்ளது.
புதிய சட்டத்திருத்தங்களின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை அவர்களுக்கு 24X7 பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அவர் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு 24X7 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கோ, நீதிபதிக்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூடுதல் பாதுகாப்பு அவர்கள் பணிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்தால் அதுவும் தொடரும்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டெல்லியில் அவர் ஓய்வு பெற்றதிலிருந்து 6 மாதங்களுக்கு வாடகை இல்லாமல் வீடு வழங்கப்படும். இந்த வீடு டைப் 7 பிரிவில் வரும். பொதுவாக டைப் 7 வீடுகள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படுவதாகவும். அவர்களுக்கு இணையான வசிப்பிடம் 6 மாத காலத்திற்கு வாடகையின்றி வழங்கப்படும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வுக்குப் பின்னர் ஆயுள் முழுமைக்குமான வீட்டுப் பணியாளர், கார் ஓட்டுநர், செயலக உதவியாளரை பெறுவார்.
அதுமட்டுமல்லாது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு விமானநிலையங்களில் விஐபி லவுஞ் சலுகை வழங்கப்படும். அதேபோல் மாதம் ரூபாய 4200க்கு மிகாமல் தொலைபேசி, மொபைல், ப்ராண்ட் பேண்ட் அல்லது மொபைல் டேட்டா வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ரூ.4200 ப்ளஸ் வரிகள் அடங்கியதாகும்.ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு வழங்கப்படும் வீட்டுப் பணியாளர், ஓட்டுநர், செயலக உதவியாளரை செலவுகளை உச்ச நீதிமன்ற நிர்வாகமே மேற்கொள்ளும்.
இதுவரை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகளுக்கு மாதாந்திர பணச் சலுகை வழங்கப்பட்டது. இப்போது பணச் சலுகை கைவிடப்பட்டு. அதற்குப் பதிலாக ஆட்களாகவே கொடுக்கப்படுவர். முன்பு இந்த செலவுகள் ரீதியாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தலா ரூ.70,000 கொடுக்கப்பட்டு வந்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ.39000 கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு பணியாட்களாகவே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.