மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான பார்வையற்ற மென்பொருள் பொறியாளர், ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாய்க்கான வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். 


 






கடந்த 2021ஆம் ஆண்டில், யாஷ் சோனகியா தனது பி டெக் பட்ட படிப்பை, இந்தூரில் உள்ள ஸ்ரீ கோவிந்திரம் செக்சாரியா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் முடித்தார். அது ஒரு அரசு உதவி பெறும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். பட்டதாரியான சோனகியாவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து 47 லட்சம் ரூபாய் வருடாந்திர சம்பளத் தொகுப்பிற்கான பணி வாய்ப்பைப் பெற்றுள்ளார்.


பணி வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும், ஆரம்பத்தில் அவர் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்கப்பட்டாலும், விரைவில் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராக சேரப் போவதாகவும் சோனகியா தெரிவித்துள்ளார். சோனகியா தனது எட்டு வயதிலேயே கிளகோமாவால் கண்பார்வை இழந்தார்.


இதுகுறித்து விவரித்த அவர், "ஸ்க்ரீன்-ரீடர் மென்பொருளின் உதவியுடன் படிப்பை முடித்துவிட்டு, கோடிங்கை கற்றுக்கொண்ட பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை தேட ஆரம்பித்தேன். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு, நான் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என்றார்.


நகரில் கேன்டீன் நடத்தி வரும் சோனகியாவின் தந்தை யஷ்பால் இதுகுறித்து பேசுகையில், "பிறந்த ஒரு நாளுக்குப் பிறகு எனது மகனுக்கு க்ளாகோமா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் காரணமாக அவரது கண்களில் பார்வை குறைவாக இருந்தது. என் மகன் எட்டு வயதை எட்டியபோது பார்வையை முழுவதுமாக இழந்தார். ஆனால், அவர் சாப்ட்வேர் இன்ஜினியராக ஆசைப்பட்டதால் நாங்கள் கைவிடவில்லை" என்றார்.


யஷ்பால் தனது மகனை 5 ஆம் வகுப்பு வரை சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படிக்க வைத்தார். பின்னர், அவரை வழக்கமான பள்ளியில் சேர்த்தார். கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் அங்கு அவரது சகோதரி ஒருவர் அவருக்கு உதவி செய்துள்ளார்.


"யாஷ் எனது மூத்த மகன். நானும் அவனுக்காக கனவுகள் கொண்டிருந்தேன். ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளராக வேண்டும் என்ற அவரது கனவு பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக நனவாகியுள்ளது" என யஷ்பால் தெரிவித்துள்ளார்.


யாஷ் சோனகியா சாதித்து காட்டியுள்ளது அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.