ஜெயின் பண்டிகை காரணமாக அகமதாபாத்தில் உள்ள இறைச்சிக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர்களை சில நாட்களுக்கு இறைச்சி சாப்பிட வேண்டாம் என குஜராத் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.






திருவிழாக்கள் காரணமாக ஆகஸ்ட் 24 முதல் 31 வரையிலும் செப்டம்பர் 4 முதல் 9 வரையிலும் நகரின் ஒரே இறைச்சிக் கூடத்தை மூட அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டிருந்தது.


இருப்பினும், மனுதாரர் குல் ஹிந்த் ஜமியத்-அல் குரேஷ் நடவடிக்கைக் குழு குஜராத் உயர் நீதிமன்றத்தில், அகமதாபாத் மாநகராட்சியின் உத்தரவு மக்களின் உணவுக்கான உரிமையை பறிக்கிறது என மனு தாக்கம் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சந்தீப் பட், "இறைச்சி சாப்பிடுவதை ஓரிரு நாட்களுக்கு நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.


குல் ஹிந்த் ஜமியத்-அல் குரேஷ் நடவடிக்கைக் குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டேனிஷ் குரேஷி ரசாவாலா, இந்த விஷயம் குறிப்பிட்ட நபர்களை கட்டுப்படுத்துவது பற்றியது அல்ல. ஆனால், அடிப்படை உரிமைகள் பற்றியது என்றார்.


மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், "இப்போது அகமதாபாத் நகரில் ஒரே ஒரு இறைச்சிக் கூடம் உள்ளது. அது ஜெயின் பண்டிகையான பர்யுஷானை முன்னிட்டு மூடப்பட்டது. ஆகஸ்ட் 23 அன்று, அகமதாபாத் கமிஷனர் முன் உரிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






விசாரணைக்குப் பிறகு, வழக்கை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு நீதிபதி பட் ஒத்திவைத்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், இறைச்சி கடைகளை அகற்ற மாநில அரசு முயற்சி செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


வழக்கை விசாரணை செய்த குஜராத் உயர் நீதிமன்றம், "தெருக்களில் உள்ள இறைச்சி கடைகளை அகற்ற மாநில அரசு முயற்சி செய்து வருகிறதா" என வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியது. இதற்கு மாநில அரசு மறுத்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.