கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தல் கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இதன் காரணமாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அரசு மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள்  பறிமுதல் செய்யப்படுகின்றன. 







கொரோனா இரவில்தான் பரவுமா? என்ற தோனியில் சிலர் வாதங்களைப் முன்வைக்கின்றனர். ஆனால், இரவு கட்டுப்பாடு என்பது உலகளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று என. ஏனென்றால், கொரோனா காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை ஒவ்வொருவருக்கும் இது நினைவு படுத்தும். இரவு 10 மணியில் இருந்து தொடங்கும் இரவு கட்டுப்பாடுகள் இதரப் பணிகளை பாதிக்காததால் மிகச்சிறந்த நடைமுறையாக உள்ளது என அரசு கூறுகிறது.  



உதாரணமாக, கொரோனா இரண்டாவது அலையில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகம் பயன்படுத்தியதாகவும், இதனால் புதிய பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்பு விகிதம் கணிசமான முறையில் குறைக்கப்பட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது(1). 


எதிர் வாதங்கள்: 


 கொரோனா பரவலுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கு எந்த பயனும் அளிக்காது என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றனர். முன்னதாக, கொரோனா மற்றும் ஒமிக்ரான்(Omicron) பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பயன்படாது என தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் (என்.ஐ.இ) துணை இயக்குநருமான டாக்டர் பிரப்தீப் கவுர் தெரிவித்தார். 






இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு பயன்படாது.  மூன்று அடுக்குகளைக் கொண்ட துணி முகக்கவசம் அல்லது சர்ஜிகல் மாஸ்க்-ஐ பயன்படுத்துங்கள். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். இரண்ட கட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள். தகுதியுள்ள நபர்கள் ஜனவரி 10ம் தேதியில் செலுத்தப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார். 


 



ஊரடங்கு காலத்தில்  கொரோனா பரவல் பற்றிய பயம் மக்களிடம் குறைகிறது. 


இரவு நேர ஊரடங்கால் பலனில்லை என்றும், உண்மையில் அது நோய்த் தொற்று பரவலை அதிகரித்து வருவதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன. உதாரணமாக, Good night: Experimental evidence that nighttime curfews may fuel disease என்ற ஆய்வு கீழ்கண்வாறு கூறுகிறது. " ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பயனற்றதாக உணர்கின்றனர். இரவு நேர ஊரடங்கு சமூக விலகலை உறுதி படுத்தவில்லை. மாறாக, அதிகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, 10 மணிக்கு முன்பாகவே  உணவு விடுதிகளில் ஒன்று கூட திட்டமிடுகின்றனர். இது, நெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. சட்டத்தை மறைமுகமாக மீறுவதில் மக்கள் இன்பம் காண்கின்றனர். இதன் விளைவாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதிர்வினையில் செல்ல துவங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 



முதல் ஊரடங்கின் பொது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விலை ஏற்றம்  


 


இரண்டாவதாக, இரவு நேர ஊரடங்கு காரணமாக, பீதியடைந்து பொருட்களை வாங்கிக் குவிக்கும் (Panic Buying) போக்கு அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக,  உணவுப்பொருட்கள், பால், மருந்துகள், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு செயற்கையை பற்றாக்குறை எற்படுகிறது.   


அடுத்த கட்ட விவாதம்:  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொற்று பரவல் ஆரம்ப நாட்களில் இருந்தே, சார்ஸ்- கோவ்- 2 வைரஸை அடித்து ஒடுக்க வேண்டிய பகையாளியாக பார்த்து வருகிறது. கொரோனா வைரஸ் எதிரான 'போரில்' வெற்றி பெறுவோம், போர்க்காள அடிப்படையில் மீட்பு பணிகள் போன்ற சொல்லாடல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


ஆனால், அறிவிற்க்கும், அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாடுகளை, இடைவெளிகளை நம்மை விட கொரோனா வைரஸ் நன்கு புரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா என்பது மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளால் வென்றெடுக்கப்பட வேண்டிய யுத்தமில்லை என்பதையும்,காவலர்கள் மானிடர்களை காக்க வந்த கடவுள்கள் இல்லை என்பதையும் சாத்தான்குளம் தந்தை- மகன் இரட்டைக் கொலை வழக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. நூற்றுக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக நடக்க வைக்கப்பட்டது, மத்தியப்பிரதேசத்தில் சப்பாத்தி உணவுடன் தொழிலாளர்கள் ரயிலில் அடிப்பட்டு கிடந்ததும் இந்தியாவின் குற்றமற்ற ஆத்மாவை கேள்வி கேட்பதாய் அமைந்தது.   


கொரோனா வைரஸ் என்பது எல்லை தாண்டிய எதிரி இல்லை என்பதை உணர்ந்து இந்நாட்டு மக்களின் பொருளாதாரம், அரசியல், சமூக நடைமுறை, மானுடவியல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  கொரோனா நோய்த் தொற்று பரவலை அணுகுவது சிறந்ததாக அமையும்.         


வாசிக்க: 


Understanding the effectiveness of government interventions against the resurgence of COVID-19 in Europe   


Good night: Experimental evidence that nighttime curfews may fuel disease dynamics by increasing contact density 


Panic Buying in India During COVID-19 Rahul Ramesh Kharat, MBA (Marketing)