வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், நெறியாளரின் பங்கு இதில் மிக மிக முக்கியம் என கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக கடந்தாண்டு தாக்கல் செய்து மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப், "பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த பேச்சுக்கள் கட்டுப்பாடற்று உள்ளன. வெறுப்புப் பேச்சு யாரோ செய்யும் தருணத்தில் தொடராமல் பார்த்துக் கொள்வது நெறியாளரின் கடமை. பத்திரிக்கை சுதந்திரம் முக்கியம்.
அமெரிக்காவைப் போல இங்கு சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால், எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். வெறுப்பு பேச்சில் மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து பேசிய அவர், "ஒருவரை கொல்வதை போன்று வெறுப்பு பேச்சில் பல அடுக்குகள் உள்ளன.
பல விதமாக அதை செய்யலாம். மெதுவாகவும் அல்லது வேறு விதமாகவும் செய்யலாம். சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் நம்மைக் கவர்கின்றனர். அரசாங்கம் ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. ஆனால், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். இது ஒரு சாதாரண பிரச்சினையா?" என கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 23ஆம் நடைபெற உள்ளது. அப்போது, வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பது தொடர்பான சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புகிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என நீதிமன்றம் விரும்புகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சட்ட ஆணையம், வெறுப்பு பேச்சு தொடர்பாக குறிப்பிட்ட சட்டங்களை பரிந்துரைத்து 2017இல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், "வெறுக்கத்தக்க பேச்சு இந்தியாவில் எந்த சட்டத்திலும் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும், சில சட்டங்களில் உள்ள சட்ட விதிகள் பேச்சு சுதந்திரத்திற்கு விதிவிலக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சு வடிவங்களை தடை செய்கின்றன" என்று ஆணையம் குறிப்பிட்டது.
வெறுப்பு பேச்சு தொடர்பாக வரைவுச் சட்டத்தையும் பகிர்ந்த சட்ட ஆணையம், புதிய பிரிவுகள் 153C (வெறுப்பைத் தூண்டுவதைத் தடைசெய்தல்) மற்றும் 505A (சில சந்தர்ப்பங்களில் பயம், எச்சரிக்கை அல்லது வன்முறையைத் தூண்டுதல்) ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரை செய்தது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தி விவாதங்கள், குறிப்பாக, சமூக ஊடகங்களில் வீடியோக்களாக அடிக்கடி வைரலாகின்றன. இதனால், இணைய நிறுவனங்கள், வெறுப்பூட்டும் பேச்சைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை என விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.