கர்நாடக மாநிலத்தில் கட்டி முடித்து 4 மாதங்களே ஆன சாலை ஒன்றில் பெரிய பள்ளம் தோன்றியதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


பெங்களூரூவின் கிழக்கு புறநகர் சாலையை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் குண்டலஹள்ளி (Kundanhalli)சுரங்கப்பாதையின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட சர்வீஸ் சாலையில், திறக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கு  ரூ.19.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் நடந்த உடனேயே நகராட்சி பணியாளர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.






இது குறித்து டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள ஒரு நபர், ” சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சாலையின் நிலை இதுதான். இதன் தரத்தை பாருங்கள். இதுதான் ‘ BBMP (Bruhat Bengaluru Mahanagara Palike)’. இதன் மூலம் அரசின் பணிகளில் தரமின்மை நிரூபணம் ஆகியுள்ளது.” என்று பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருந்தார்.






இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பு ஏற்பட்டது. திறக்கப்பட்ட 4 மாதங்களிலேயே பள்ளம் விழுந்ததால் பொது மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.






இதற்கு காரணம்,  சுரங்கப்பாதையின் வழியே செல்லும் தண்ணீர் குழாய் உடைந்ததால் சாலையில் பள்ளம் விழுந்துள்ளதாக  சாலை பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்துள்ளனர்.  இந்த உடைப்பு காரணமாக பெங்களூருவின் சில பகுதிகளில் 24 மணி நேரம் வரை காவிரி நதிநீர் விநியோகம்  (BWSSB Cauvery Water Pipeline)பாதிக்கப்பட்டுள்ளது. 450 மிமீ நீளமுள்ள தண்ணீர் குழாய் வெடித்துள்ளது. 


இதற்கு காங்கிரஸ் கட்சியனர், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ள திட்டங்களில் அரசு கவனத்துடன் கையாள வேண்டுமென்று கூறியுள்ளனர். இந்த விசயத்திற்கு இன்னும் பா.ஜ.க.வினர் எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை.