பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் எழுத்தாளரும், கொடையாளருமான சுதா மூர்த்தி, ஹிந்துத்வ நிலையாளரான, ஷிவ் ப்ரதிஷ்டன் நிறுவனர் சாம்பாஜிராவ் பிடே காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இது சம்பந்தமான வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எழுத்தில் முற்போக்கான பல விஷயங்களைக் கூறும், பெண் கல்வியை ஆதரிக்கும் சுதா மூர்த்தி எப்படி சாம்பாஜிராவ் பிடேவின் காலில் விழுந்தார் என்று கேள்வி எழுப்புகின்றனர். சுதா மூர்த்தி ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இன்ஃபோசிஸ் ஃப்வுண்டேஷனின் நிறுவனராக இருந்த அவர் டிசம்பர் 31, 2021ல் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தான் அண்மையில் அவர் மகாராஷ்டிராவில் பிடேவிடம் ஆசிர்வாதம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது.






சர்ச்சைக்குரிய சாம்பாஜிராவ் பிடே: 
மகாராஷ்டிராவில் ஷிவ் பிரதிஷ்டன் என்ற அமைப்பை தோற்றுவித்தவர் சாம்பாஜிராவ் பிடே. இவர் கடந்த 2018ல் நடந்த பீமா கோரேகான் கலவரத்தில் முற்றிய குற்றவாளியாக கருதப்படுகிறார். புனே மாவட்டத்தில் உள்ள பீமா- கோரேகாவ் போர் நினைவு சின்னத்தில் 200-வது ஆண்டு வெற்றி விழா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.


இந்த வன்முறை சம்பவத்திற்கு முந்தைய நாளில் எல்கர் பரிஷத் மாநாட்டில் நடைபெற்ற ஆத்திரமூட்டும் பேச்சுக்களே காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். மேலும் எல்கர் பரிஷத் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி, சமூக ஆர்வலலும்,கவிஞருமான வரவர ராவ் உள்பட பலரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி உயிரிழந்துவிட்டார். இந்த வன்முறைக்கு இந்துத்துவா ஆர்வலர்களான மிலிந்த் ஏக்போடே, சாம்பாஜி பிடே ஆகியோரின் தூண்டுதல் தான் காரணம் என தலித் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் சாம்பாஜியிடன் தான் சுதா மூர்த்தி ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். 


பத்திரிகையாளருக்கு அவமதிப்பு:
அண்மையில் கூட சாம்பாஜிராவ் பிடே சர்ச்சையில் சிக்கினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு திரும்பிய அவரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியெடுக்க முயற்சி செய்ய அதற்கு அவர் அந்த பெண் நிருபரிடம், நம் பாரத்தாய் ஒரு பெண். நம் நாட்டுப் பெண்கள் அனைவருமே பாரதத் தாயை ஒத்தவர்கள் தான். அப்படியிருக்க நீங்கள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்கிறீர்கள். அது விதவைக் கோலம் போல் இருக்கிறது. என் பாரதத் தாயை விதவைக் கோலத்தில் பார்க்க முடியாது. பொட்டு வைக்காத உங்களுக்கு நான் பேட்டி அளிக்க மாட்டேன் என்று கூறிச் சென்றார். அந்தப் பெண் நிருபருக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விளக்கம் கேட்டு சம்பாஜிராவ் பிடேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் இது போன்ற பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.