இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அரிசி ஏடிஎம் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ஒடிசா அரசாங்கமானது அரிசி ஏடிஎம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. அரிசி ஏடிஎம் என்றால், வேறொன்றுமில்லை. சாதாரண ஏடிஎம்-ல் கார்டை வைத்தால் பணம் வருவது போல, இயந்திரத்தில் ரேசன் கார்டு எண்ணை பதிவிட்டால் அரிசி வரும். இதன்மூலம் மக்கள் , ரேசன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது குறையும் என கூறப்படுகிறது.
எப்படி செயல்படுகிறது?
இதன் செயல்பாடானது மிக எளிமையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தில் தொடு திரை இருக்கும்.
அந்த தொடு திரையில் , ரேசன் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.
இதையடுத்து, பயோமெட்ரிக் அடையாளம் ( கைரேகை உள்ளிட்டவை ) சரிபார்க்கப்படும்.
பின்னர், இயந்திரமானது அரிசியை வழங்கும்.
நன்மைகள்:
இந்த இயந்திரமானது, ஒரு மணி நேரத்திற்கு 0.6 வாட்ஸ் மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், எடை குறைப்பு செய்யப்படுவது சிரமமான காரியம் என்பதால், ஏமாற்றப்படுவது குறையும் என்றும், மக்களுக்கான சேவை உரிய முறையில் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கான பொது விநியோக முறையை (பி.டி.எஸ்) மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் எனப்படும், தானியம் வழங்கும் இயந்திரமானது ஒடிசா மாநில அரசாங்கத்தின், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் க்ருஷ்ண சந்திர பத்ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.