உத்தரப் பிரதேசம் மாநிலம் பில்பூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரயிலில் பயணித்த சிலர், தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்தியதால் ரயில் பெட்டி முழுவதும் புகை பரவியது.


இதனால், மெதுவாக சென்ற ரயிலில் இருந்து 12 பயணிகள் அச்சத்தில் குதித்துள்ளனர். இதில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மொராதாபாத் பிரிவுக்கு உட்பட்ட பில்பூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா-அமிர்தசரஸ் ரயிலின் ஜெனரல் கோச்சில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.


மர்ம நபர்களால் பயணிகள் அச்சம்:


இதுகுறித்து வடக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயிலை உடனே நிறுத்துவதற்காக அவசரகால அலாரம் சங்கிலியை இழுத்தனர். ரயிலில் இருந்து பீதியில் வெளியே குதித்தனர். அதில், 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.


நகர்ந்து கொண்டிருந்த ஹவுரா-அமிர்தசரஸ் ரயிலின் ஜெனரல் கோச்சில் இருந்த தீயணைக்கும் கருவியை சில மர்ம நபர்கள் ஆன் செய்துள்ளனர். இதனால், தீ விபத்து ஏற்பட்டது போன்ற தோற்றம் உருவாகியது போல் தெரிகிறது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.


ரயில்களில் பெண் பயணிகள் உட்பட அனைவரின் பாதுகாப்பிற்காக இந்திய ரயில்வே பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், உள்ளூர் காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர் கதையாகும் ரயில் விபத்துகள்: சமீப காலமாக, ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. விபத்துகளைக் குறைக்கவும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பாதையை புதுப்பித்தல், மேம்பட்ட சிக்னல் அமைப்புகளை நிறுவுவது, பாலத்தை வலுப்படுத்துவது, கவாச் பாதுகாப்பு கருவியை செயல்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.


கடந்த ஜூலை மாதம், உத்தர பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர் - திப்ரூகர் ரயிலானது தடம் புரண்டு, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.