ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், மத்திய அரசின் வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?


ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த 1990-பேட்ச் இந்திய ஆட்சி பணி (IAS) அதிகாரி சஞ்சய் மல்ஹோத்ரா. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியல் பட்டதாரியான இவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.



மின்சாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் போன்ற பல துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். இவர், வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிதி சேவைகள் துறை செயலாளராக பதவி வகித்துள்ளார்.


 






மாநில மற்றும் மத்திய அரசில் நிதி மற்றும் வரிவிதிப்பு துறை ஆகியவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர். நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கை வகுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.


தற்போது, ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸ் நாளை ஓய்வுபெறுகிறார். இவருக்கு முன்பு, ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியில் இருந்து பாதியிலேயே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார்.


இதையும் படிக்க: இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின்