குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்து வந்தவர் விஜய் ரூபானி. இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இவர் அந்த மாநிலத்தில் உள்ள வசினோதேவி பகுதியில் மால்தாரி சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசும்போது, எனது அரசாங்கம் கடுமையான பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது. பசுக்களை வெட்டுபவர்களிடம் இருந்து பசுக்களை காப்பாற்றுவதற்கு சட்டம், நிலங்களை சுரண்டுவதற்கு எதிரான சட்டம், செயின் பறிப்பவர்களை தண்டிப்பதற்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.




அதுமட்டுமின்றி, லவ் ஜிகாத்திற்கு எதிராக ஒரு சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இந்து பெண்களை சிக்க வைத்து அவர்களுடன் தப்பி ஓடுபவர்களிடம் நாங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். அரசு மானியத்தீவனம் வழங்குவதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்களை பட்டியினில் இருந்து காப்பாற்றியுள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்ச் மற்றும் பனஸ்கந்தா தாலுகாவில் குறைந்த மழையே பெய்தது.”


இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக, குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா பேசும்போது, விஜய் ரூபானி மாடுகளை வெட்டுவதற்கு எதிரான சட்டம் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். பசுவின் உள்ளே முப்பது முக்கோடி தெய்வங்களும் வாழ்கின்றனர். அதன் காரணமாகவே, பசுக்களை வெட்டுவதற்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தோம். இந்த சட்டத்தை சட்டசபையில் அமல்படுத்துவதற்கு முன்பு என்னை ரூபானி அழைத்தார். அப்போது, அவர் என்னிடம் பசுக்களுக்கு கருணை காட்டாதவர்களுக்கு எந்த கருணையும் காட்டக்கூடாது என்று கூறினார் என்று பேசினார்.


குஜராத் மத சுதந்திர சட்டம் 2021 கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருமணம் மூலம் கட்டாய மதமாற்றம் அல்லது மோசடியில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




வட இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மாட்டுக்கறி வைத்திருந்தவர்கள் மீதும், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றால் கூட அவர்கள் மீது குறிப்பிட்ட பிரிவினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். மாட்டுக்கறி உண்பவர்கள் மீது சாதி ரிதீயிலான தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த மோசமான நிகழ்வுகளால் வட இந்தியாவில் பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பல முறை வன்முறை சம்பவங்கள் இதன் காரணமாக நிகழ்ந்துள்ளது. பசுக்கள் மற்றும் காதல் திருமணங்கள் காரணமாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழும் மோசமான நிகழ்வுகளுக்கு எதிராக தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.