2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5% சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது.






நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். இதன் மூலம், பொருளாதாரத்தில் பண புழக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டு, பண வீக்கம் குறைக்கப்படும்.


அதன்படி, தொடர்ந்து 7வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ஏழாவது முறையாக நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்திலும், ரெப்போ ரேட் விகிதத்தை அதே நிலையில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், “ ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவிகிதமாக வைத்திருக்க நாணயக் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.


பணவீக்கம் என்றால் என்ன?


வங்கிகளில், அதிக பணம் இருந்தால், மக்களுக்கு அதிக கடன்களை வங்கிகள் வழங்கும். அதனால் மக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனால், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரிக்கும். மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை ஏற்படும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.


எனவே பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் ( அதாவது பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ), மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும்.


ஆகையால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள். கடன் வாங்குவது குறையும் போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை மக்கள் வாங்குவது குறையும். பொருட்களை வாங்காத போது, அதன் விலை குறைய தொடங்கும். பணவீக்கமும் குறையும்.