அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக, வங்கிகளுக்கான குறுகியகால வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை 6%-ஆக குறைத்த ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் குழு, இன்று ஒருமனதாக முக்கிய வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், நிலையான வைப்பு வசதி(SDF) விகிதத்தை 5.75 சதவீதமாகவும், எல்லைநிலை நிலையான வசதி(MSF) விகிதத்தை 6.25 சதவீதமாகவும் குறைத்துள்ளது.
ரெப்போ வட்டி விகித குறைப்பால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. புதிதாக தனி நபர் கடன் வாங்குவோருக்கு வட்டி குறைவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த 2 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த 5 ஆண்டுகளாக, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல், 6.5 சதவீதத்திலேயே இருந்துவந்த நிலையில், பிப்ரவரியில் 0.25 சதவீதமும், தற்போது 0.25 சதவீதம் என மொத்தம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், கடன் செலவுகளை குறைக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை குறைந்திருப்பதால், பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில், வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை, பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய வர்த்தகப் போரால், உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலை, உள்நாட்டு வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.