Tahawwur Rana: இந்தியா வந்தடைந்ததும் தஹாவூர் ராணா தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) விசாரணைக் காவலில் அடைக்கப்பட உள்ளார்.
இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா:
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவும், பிரத்யேக விமானம் மூலம் பயணிப்பதாக கூறப்படுகிறது . அமெரிக்க நீதிமன்றத்தின் பரிந்துரைகளின்படி, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இரண்டு சிறைகளில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணா இந்தியா வந்தவுடன், விசாரணைக்காக முதல் சில வாரங்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) காவலில் வைக்கப்படுவார் என்று உயர் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராணாவை நாடு கடத்தும் நடவடிகையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , NIA மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து உன்னிப்பாகக் மேற்பார்வையிட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடு கடத்தல் வழக்கு:
தீவிர விசாரணைகளை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்த ராணாவை கைது செய்ய, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் அமெரிக்க அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணாவை நாடு கடத்துவதை உறுதிசெய்து, "இந்தியாவுக்குச் சென்று அவர் நீதியை எதிர்கொள்வார்" என்று உறுதியளித்தார். இதனிடையே, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய தஹாவூர் ராணாவின் விண்ணப்பத்தைஅமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது . 64 வயதான தொழிலதிபர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த தஹாவூர் ராணா?
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபரான ராணா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாத அமைப்பின் தீவிர செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். மும்பையில் முக்கிய இலக்குகளை உளவு பார்த்த பாகிஸ்தான்-அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் (தாவூத் கிலானி என்ற பெயர்) பயண ஆவணங்களை எளிதாக்குவதில் ராணா முக்கிய பங்கு வகித்தார். அந்த இடங்கள் பின்னர் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் தளவாட மற்றும் மூலோபாய ஆதரவுடன் எல்இடி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன.
ராணா நவம்பர் 11 முதல் 21, 2008 வரை துபாய் வழியாக மும்பைக்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது . பவாய் நகரில் உள்ள ஹோட்டல் ரெனைசேன்சாஸில் தங்கியிருந்தபோது, தாக்குதல்களுக்கான தளவாட ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்ததாக நம்பப்படுகிறது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 26 அன்று ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுவரை, இந்த கொடிய தாக்குதலுக்கு தண்டனை பெற்ற ஒரே லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே. தாக்குதலின் போது அதிகாரிகளால் அவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.