இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பல நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, மத்மகேஷ்வர் கோயிலுக்கு மலையேற்றப் பாதையில் திங்கள்கிழமை முதல் சிக்கித் தவித்த 293 யாத்ரீகர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.






உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பஞ்ச கேதார் கோயில்களின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த ஆலயம் 11,473 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 293 யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்துள்ளார்.  மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறுகையில் , “மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டனர். சிக்கித் தவித்த 240 யாத்ரீகர்கள் ஹெலிகாப்டர் மூலம் புதன்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மேலும் 53 யாத்ரீகர்கள் கயிறு மூலம் நதியைக் கடக்கும் முறை பயன்படுத்தி வெளியேற்றப்பட்டனர்” எனக் கூறியுள்ளார்.


திங்களன்று கவுண்டர் கிராமத்தில் பந்தோலியில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 290 யாத்ரீகர்கள் அந்த பகுதியில் சிக்கித் தவித்தனர். மலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகள் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட சுழல் நீர் பல்வேறு இடங்களில் மக்களை இழுத்துச் சென்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது.






மத்மஹேஷ்வர் கோவிலுக்கு கீழே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நானு கார்க்கில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் ஒரு தற்காலிக ஹெலிபேட் அமைப்பட்டது. அங்கிருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உகிமத் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஜிதேந்திர வர்மா கூறியுள்ளார். யாத்ரீகர்கள் நானு கார்க்கில் இருந்து ஹெலிகப்டர் மூலம் அப்பகுதியில் இருந்து, ரான்சி கிராமத்திற்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டனர்.  இதற்கிடையில், திங்கட்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கிய ரிஷிகேஷின் லக்ஷ்மன் ஜூலா பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இடிபாடுகளில் இருந்து ஒரு தம்பதி மற்றும் அவர்களது மகன் உட்பட மேலும் நான்கு உடல்களை மீட்புப் படையினர் வெளியே எடுத்தனர். உத்தரகாண்டில் தொடர் மழை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.