உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் உற்பத்தியாளர் எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
செல்போன் உற்பத்தி:
கடந்த 2014-2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களின், மொத்த ஏற்றுமதி இரண்டு பில்லியன் அதாவது 200 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் சீனாவிற்கு அடுத்தபடியாக செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருப்பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டில் 25 கோடி செல்போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 27 கோடியாக உயரும் என சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிடுகிடு உயர்வு:
2014 மற்றும் 2022-க்கு இடையில் செல்போன்களின் உள்ளூர் உற்பத்தி 23 சதவிகிதம் அளவிற்குஉயர்ந்துள்ளது. உள்ளூரில் தேவை அதிகரிப்பு, டிஜிட்டல் கல்வியறிவு அதிகரிப்பு மற்றும் மத்திய அரசின் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி ஊக்கத்தொகை போன்ற பல்வேறு காரணங்கள், செல்போன் உற்பத்தியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்ட உந்துகோலாக அமைந்துள்ளன.
Made In India:
2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்திய சந்தையின் ஏற்றுமதியில் 98% க்கும் அதிகமானவை 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு இந்த ஏற்றுமதி அளவு வெறும் 19 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாக சில ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. கடந்த நிதியாண்டில் இந்தியா தயாரித்த 25 கோடி செல்போன்களில் 20 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவை குறைவதால் 2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி முந்தைய ஆண்டை விட 3% குறைவாக இருந்தது. இருப்பினும், மதிப்பு அடிப்படையில், உற்பத்தியானது ஆண்டுக்கு 34% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் உற்பத்தி:
2022 ஆம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களின் மொத்த எண்ணிக்கையில் 25% ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்ததாகும். இது 2021 ஆம் ஆண்டில் வெறும் 12% ஆக இருந்தது. இதனால் நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 65 சதவிகிதம் வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி பொருட்களின் மதிப்பு 162 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ரூ.4.25 லட்சம் கோடி:
இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்துள்ளது. நடப்பாண்டில் ரூ.4 லட்சம் முதல் ரூ.4.25 லட்சம் கோடி மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்யும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கான தரவுகளின் படி, இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகப்படியான செல்போன் உற்பத்தியுடன் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்திலும், அதை விட 1.8 மடங்கு குறைந்த உற்பத்தியுடன் மூன்றாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக வியட்நாம் உள்ளது. இருப்பினும், ஏற்றுமதியில், சீனா மற்றும் வியட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஏனெனில் வியட்நாமில் செல்போனின் தேவைகள் குறைவாக உள்ளதால், அந்நாட்டின் உற்பத்தியில் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.