நாடு முழுவதும் இன்று 74ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் மட்டும் இன்றி நாட்டின் குடியரசு தினம் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மெல்லிசையாக பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல் வெளியிடப்பட்டது. பாடகியும் இசையமைப்பாளரான பவித்ரா சாரி பாடிய இந்த பாடல் அமெரிக்க தூதரகத்தின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது.
இரண்டு அமெரிக்க அதிகாரிகள் இசை கருவிகளை கொண்டு இசைக்க, பவித்ரா சாரி பாடும் வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிகாரியான ராகவன் புல்லாங்குழலை இசைப்பதும் ஸ்டெபானி கிட்டாரை வாசிப்பதும் பதிவாகியுள்ளது.
பொதுவாக ராஜபாதையில் நடத்தப்படும் குடியரசு தின அணிவகுப்பு நாட்டின் ராணுவ வலிமையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் பறைசாற்றும்.
அந்த வகையில், இந்தாண்டு நடத்தப்பட்ட அணிவகுப்பு மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், புதுப்பிக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட கடமையின் பாதையில் (Kartavya Path) அணிவகுப்பு முதல்முறையாக நடத்தப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து ராஜபாதை என்றழைக்கப்பட்டு வந்த இடத்திற்கு கடந்தாண்டு பிரதமர் மோடி கடமையின் பாதை என பெயர் மாற்றினார். இது இந்தியா இந்தியா கேட் அருகில் அமைந்துள்ளது.
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர் தலைமையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது கூடுதல் சிறப்பு.