Republic Day 2025: 15,000 போலீசார், 70 பாரா யூனிட்கள், 6 அடுக்கு பாதுகாப்பு, AI கேமரா - உச்சகட்ட கண்காணிப்பில் டெல்லி
Republic Day 2025: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Republic Day 2025: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில், 6 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின கொண்டாட்டம்:
நாட்டின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்காக ஒட்டுமொத்த டெல்லியும் விழாக்கோலம் பூண்டு வருகிறது. தேசபக்தி, பெருமை மற்றும் கொண்டாட்டத்திற்கான நாளாக மட்டுமின்றி, இந்தியாவின் ராணுவ வலிமை, கலாச்சார செழுமை மற்றும் ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்த ஏற்ற நாளாகும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைப்பதத் தொடர்ந்து, குடியரசு தலைவர் கர்தவ்யா பாதைக்கு வந்து கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இந்தோனேசிய பிரதமரும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி டெல்லி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட துணை ராணுவக் குழுக்கள், 15,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஆயிரக்கணக்கான சிசிடிவிகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை அமைத்துள்ளது.
பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, ட்ரோன்கள், சிசிடிவிகள், முக அங்கீகார அமைப்புகள் நிறுவப்பட்ட கார்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண தரவுத்தளத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு-செயல்படுத்தப்பட்ட கேமராக்கள் மூலம் நகரம் கண்காணிக்கப்படுகிறது. எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும், குடியரசு தின விழாவை சுமூகமாக கொண்டாட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
1 லட்சம் பங்கேற்பாளர்கள்:
விஐபி மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்காக தனி இடம் விசாலமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் பேர், குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. சந்தேகப்படும்படியாக எதையும் கண்டால், பொதுமக்கள் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 20 முதல் 30 மீட்டர் இடைவெளிக்குள் ஒரு போலீசாரை பொதுமக்கள் காண முடியும் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாஸை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாக QR குறியீடுகள் கொண்ட பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்களின் தரவுகள் இருப்பதால், யாராவது அதை நகலெடுக்க முயற்சித்தால் உடனடியாக பிடிபடுவர் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்படும். மத்திய டெல்லி, வடக்கு டெல்லி மற்றும் புது டெல்லி உள்ளிட்ட பிற மாவட்டங்களின் டிசிபிகள் வழித்தடத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நாசவேலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை நம்பிக்கை:
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய டெல்லி டிசிபி மல்ஹா"டெல்லி மாவட்ட காவல்துறையால் சுமார் 15,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 8-9 விளக்கங்கள் மற்றும் ஒத்திகைகள் நடந்துள்ளன. ஜனவரி 26 மற்றும் டெல்லி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், எங்களால் முடியும். எந்த வகையான தற்செயல்களையும் சமாளிப்போம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.