சம்பந்தப்பட்ட சலூன் அப்பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 கோடி கொடுக்க வேண்டுமென தீர்ப்பில் தெரிவித்துள்ளது நீதிமன்றம்


ஐடிசி ஹோட்டல் இந்தியாவில் புகழ்பெற்ற ஓட்டல் ஆகும். சென்னை ஐடிசியைச் சேர்ந்த மவுரியா ஹோட்டல் டெல்லியில் உள்ளது. 2018ம் ஆண்டு 42 வயதான பெண் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அங்குள்ள சலூனில் தனக்கு பிடித்தவாறு முடிவெட்டிக்கொள்ள அவர் ஆசைபட்டுள்ளார். தனக்கு புதுவேலைக்கான நேர்காணலும் இருப்பதால் அழகாக முடி வெட்டிக்கொண்டு தன்னுடைய எதிர்கால பணியை தொடங்க திட்டமிட்டுள்ளார்.  பக்காவாக ப்ளான் செய்துகொண்டு சலூன் சென்ற அவர், தனக்கு எப்படி முடி வெட்ட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். சரியென தலையைக் கொடுத்த அவருக்கு பின்னால் அதிர்ச்சி காத்திருந்தது. தான் கூறியது போல முடியை வெட்டாமல் தன்னுடைய நீண்ட முடியை ஷார்ட்டாக வெட்டியுள்ளது அந்த சலூன். எல்லாம் முடிந்தே இதைக் கவனித்துள்ளார் அப்பெண். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் சலூன் நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்துள்ளார். 




செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த சலூன், முடி வெட்டியதற்கு பணம் வேண்டாமென்றும் கூறியுள்ளது. அதேவேளையில் முடியை தவறாக வெட்டிய ஆள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் ஐடிசியின் சி இ ஓ வரை சென்றுள்ளது. பின்பு முடி வளருவதற்காக ஒரு ட்ரீட்மெண்டை இலவசமாக செய்வதாகவும் சலூன் தெரிவித்துள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். இலவச டிரீட்மெண்ட் என சலூன் செய்த காரியத்தால் அப்பெண்ணின் வழக்கமான முடியே பாதிக்கப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாமல் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் அப்பெண். அப்புகாரில் ’’நான் கூறியது ஒன்று. அவர்கள் செய்தது ஒன்று. கண் பார்வைக்காக நான் கண்ணாடி போடுவேன். முடி வெட்டும் போது கண்ணாடியும் நான் போடவில்லை. மேலும் முடி வெட்டும்போது தலையை கவிழ்க்க சொன்னார்கள். அதனால் அங்கு நடந்தது என்னவென்றே தெரியவில்லை. அனைத்தும் முடிந்து கண்ணாடியை பார்த்தால் வேறுமாதிரி இருக்கிறது. இதனால் என் பணி போய்விட்டது. என்னுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது’’ என குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம்,  ’’முடி போனதால் தன்னுடைய கனவேயே தொலைத்துள்ளார் இப்பெண். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரால் பணியிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. அவர் கூறியது போல முடி வெட்டாததால் அவருக்கு பல நஷ்டங்கள் ஏற்பட்டு விட்டது. அனைத்துக்கும் சேர்த்து நஷ்ட ஈடாக குறிப்பிட்ட சலூன் நிர்வாகம் அப்பெண்ணுக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்’’ என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.




மேலும் குறிப்பிட்ட நீதிமன்றம், ’’பெண்கள் மனதளவில் தங்களது முடியோடு ஒன்றியிருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முடியை அழகாக வைத்திருக்க அவர்கள் குறிப்பிட்ட தொகையை செலவு செய்கிறார்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்