கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.2,220 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி பலத்த மழையைத் தொடா்ந்து பயங்கர நிலச்சரிவுகள் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்டன. மனதை உலுக்கிய இப்பேரழிவில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்த நிலச்சரிவால் நிா்கதியான குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவா்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. இப்பணிகள் தொடா்பாக ஆளும் கட்சியினரும் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் பாரத பிரதமா் மோடியை கேரள முதல்வா் பினராயி விஜயன் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். வயநாடு மறுக்கட்டமைப்புப் பணிகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் ரூ.2,220 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். மாநிலத்தின் கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் முன்வைத்தாா். கோழிக்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, பிரதமரை சந்தித்த பின் செய்தியாளா்களிடம் பேசிய பினராயி விஜயன், கோழிக்கோடு மாவட்டம், கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தினேன் என்றாா்.
ஆழப்புழாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஓா் இடத்தை தாம் அடையாளம் கண்டுவைத்துள்ளதாக கேரளத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி அண்மையில் கூறியிருந்த நிலையில், அவரது கருத்து குறித்த கேள்விக்கு கேரள முதல்வா் அளித்த பதில்,கோழிக்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் கீழ் மாநில அரசு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தியுள்ளது. எனவே, அங்குதான் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். கூடுதலாக என்ன தேவைப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றித் தர மாநில அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தேன் என்றாா் அவா். பிரதமா் உடனான தனது சந்திப்பு புகைப்படத்தை பினராயி விஜயன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோரை பினராயி விஜயன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.