ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.


ரசாயன ஆலையில் வெடிவிபத்து:


சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு உட்பட்ட எசியன்டியா பார்மா நிறுவனத்தில் இன்று மாலை பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. ரியாக்டர் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆரம்பத்தில், இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


காயமடைந்த அனைவரும் அனகப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரியாக்டர் வெடித்ததில் உடல்கள் சிதறி, கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு செல்லும் முதல்வர்: விபத்து நடந்த இடத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை செல்கிறார். விபத்து தொடர்பாகவும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.


 






உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளார். மேலும், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதியில் தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.