தலித், பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை உள்ஒதுக்கீடு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இன்று நாடு தழுவிய அளவில் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின.


பீகாரில் பரபரப்பு சம்பவம்: தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தால் தமிழ்நாடு பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், வட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


இந்த நிலையில், பீகாரில் உள்ள கோபால்கஞ்சில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்தை கும்பல் ஒன்று கொளுத்த முயற்சித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் அந்த கும்பலை காவல்துறை தடுத்து நிறுத்தியது.


இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற பேருந்தை ஆயுதம் ஏந்திய கும்பல் சூழ்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். அந்த பேருந்தின் டயரை ஒருவர் எரிக்க முயற்சிக்கிறார்.


பள்ளி பேருந்தை கொளுத்த முயற்சித்த கும்பல்: அந்த பேருந்து சென்ற சாலையில் பல டயர்கள் எரிந்து கிடக்கின்றன. வைரலான மற்றொரு வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் ஒரு ஆணும் பெண்ணும் செல்கிறார்கள். அவர்களை ஒரு கும்பல் தடுத்து நிறுத்துகிறது. இதுகுறித்து கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் ஸ்வர்ன் பிரபாத் கூறுகையில், "பாரத் பந்த் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் உஷார்படுத்தப்பட்டன. பெரிய போலீஸ் படை குவிக்கப்பட்டது.


 






ட்ரோன் கேமராக்கள் மூலம் பிரச்னைகளில் ஈடுபடும் சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், பேருந்திற்கு தீ வைக்க முயன்றவர்களை சிறைக்கு அனுப்பவும் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.


நகரத்தில் சில வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், கோபால்கஞ்சில் பாரத் பந்த் கலவையான வரவேற்பையே பெற்றது. சாலையில் சில வாகனங்கள் இயக்கப்பட்டன. சில போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலை 27 மற்றும் ரயில் பாதைகளில் இடையூறுகளை ஏற்படுத்தினர்" என்றார்.