கடந்த 2016ஆம் ஆண்டு, மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பிறகு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: இந்த சூழலில், கடந்தாண்டு ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் வங்கியில் ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்தது.
2019ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. இந்த நிலையில், 97.87 சதவிகித 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தங்களிடம் வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இன்னும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இன்னும் புழக்கத்தில் உள்ள 2 ரூபாய் நோட்டுகள்: கடந்தாண்டு மே 19ஆம் தேதி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான சமயத்தில், 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தாண்டு, ஜூன் 28ஆம் தேதி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 7,581 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. கடந்தாண்டு, அக்டோபர் 9ஆம் தேதி முதல், தனிநபர்களும் நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களுக்கு நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி மாற்றி கொள்ளலாம்.
சில காலமாகவே மக்களின் செலவிடும் திறன் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவால் நுகர்வோர் அதிக அளவில் செலவிடுவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.