இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோர்லி மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.


ரத்தன் டாடாவின் இறுதி பயணம்:


பெரிதும் மதிக்கப்படும் தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய, அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 






டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வொர்லி மயானத்தில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.


இந்தியாவின் அடையாளம்:


பணிவு, இரக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய வணிக நிலப்பரப்பை வடிவமைக்க உதவினார். வணிகத்தில் புத்திசாலித்தனத்திற்கு அப்பால், டாடா தனது நேர்மை, நெறிமுறை மற்றும் சமூக நலனுக்கான அர்ப்பணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டார்.


இது அவரை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு அடையாளமாக மாற்றியது. டாடா குழுமத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்றியது மட்டுமல்லாமல், பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் தன்னை அர்ப்பணித்ததற்காகவும் நினைவுகூறப்படுகிறார்.


இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா டிரஸ்ட் , டாடாவின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. 


குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உலகின் முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.