Rapidx Rail: நாட்டில் முதல் ரேபிட் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி  துவங்கி வைத்தார். இந்த ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும்  முயற்சி:


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் புதிய ரயில் சேவை அறிமுகமாக உள்ளது.  ஏற்கனவே பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில், புல்லட் ரயில் வரிசையில் தற்போது ரேபிட் (Rapidx) என்ற ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


ரேபிட் எக்ஸ் ரயில்:


ரேபிட் ரயிலை பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த ரயில்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இது ஏரோ டைனமிக்ஸ முறையில் நீளமான மூக்குப்பகுதி கொண்ட ரயிலாக உருவாக்கப்பட்டுள்து. மேலும், இந்த ரயிலில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த ரயில் அதிக வேகத்தில் பயணிக்கும். மெட்ரோ ரயில் போலவே இந்த ரயில் பயணிக்கு தண்டவாளங்களுக்கு ஜல்லி கற்கள் இல்லாத தண்டவாளங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.   தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்களை விட இதனின் வேகம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ரேபிட் எக்ஸ் ரயில் 160 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


டெல்லி டூ மீரட்:


இந்த அதிவிரைவு ரயில் டெல்லி-மீரட் இடையே இன்று துவங்கப்பட்டுள்ளது. டெல்லி - மீரட் இடையேயான ரேபிட் எக்ஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று துவங்கி வைத்தார். 17 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ரயில் செல்கிறது. ஷாஷிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டெப்போ என  5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு இடைவெளியில் இயக்கப்படும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்:


ஒவ்வொரு ரேபிட் எக்ஸ் (Rapidx) ரயில்களிலும் சுமார் 1,700 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 6 பெட்டிகள் உள்ளன. சாதாரண பெட்டியில் 72 இருக்கைகளும், பிரீமியம் பெட்டியில்  62 இருக்கைகளும் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கிறது. நின்று கொண்டே பயணிப்பவர்களுக்கு வசதியாக கைப்பிடிகள் இருக்கின்றன. இதுதவிர லக்கேஜ் வைப்பதற்கான வசதி, சிசிடிவி கேமரா, அவசர கால உதவிக்கான பட்டன், பயணிகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கும் வகையிலான மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி உள்ளிட்டவை இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.