'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிராமணியம் தொடர்பாக பாடகர் அறிவு சில சர்ச்சைக்குரிய வரிகளை பாடினார். விழாவில் பங்கேற்றிருந்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அதை கைத்தட்டி வரவேற்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை நோக்கி பயணித்து வருகிறது தமிழக அரசியல் களம். அதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர்.
"பார்ப்பனியத்தை தூக்கி அடி"
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் தனது கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார். இது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், தங்களுடைய கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார்.
விஜய்யின் பேச்சும், கொள்கைகளும் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர்:
இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். பிராமணியம் தொடர்பாக பாடகர் அறிவு சில சர்ச்சைக்குரிய வரிகளை பாடினார். 'பார்ப்பனியத்தை தூக்கி அடி, புத்தரின் பவுத்த மதத்தை தழுவு' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடலை விஜய் முன்பு அவர் பாடினார். இந்த வரியை விஜய் கைத்தட்டி வரவேற்றார்.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கத்திற்கு என நீண்ட நெடிய வரலாறு உண்டு. நீதி கட்சி தொடங்கி திராவிடர் கழகம், திமுக வரை பிராமணியத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப, அறிவு பாடிய பாடலை விஜய் கைத்தட்டி வரவேற்று இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: Ajith : பில்லா 3 வராது ஆனா வேற ஒன்னு பண்றோம்..மீண்டும் இணைகிறது அஜித் விஷ்ணுவர்தன் மற்றும் யுவன் கூட்டணி