அஜித் குமார்
நடிகர் அஜித் தற்போது ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் ரேஸிங் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். மகிழ் திருமேணி இயக்கத்தில் விடாமுயற்சி , ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இரு படங்கள் பொங்கல் ரிலீஸூக்கு ரெடியாகி வருகின்றன. மேலும் 2025 ஆம் ஆண்டு துயாயில் நடக்கவிருக்கும் மிச்லின் கார் ரேஸிங் போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு அஜித் ரேஸிங் சார்பாக கலந்துகொள்ள இருக்கிறது. அடுத்தடுத்து இரு படங்கள் ரிலீஸூக்கு ரெடியாக இருக்கும் நிலையில் அடுத்தபடியாக அஜித் யாருடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மீண்டும் இணையும் அஜித் விஷ்ணு வர்தன் கூட்டணி
அஜித் மற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இருவரின் கூட்டணியில் கடந்த 2007 ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இந்தியில் அமிதாப் பச்சன் , தமிழில் ரஜினி நடித்த ஒரு கதையை எப்படி புதிதாக எடுக்க முடியும் என்று எல்லாரும் கேள்வி எழுப்பியபோது அஜித்தை வைத்து ஒரு செமையான கேங்ஸ்டர் படத்தை வழங்கினார் விஷ்ணுவர்தன். செம ஸ்டைலான கேங்ஸ்டராக அஜித் , யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை என இந்த மூவரின் கூட்டணி இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கும் கூட்டணியாக இருந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு வெளியான ஆரம்பம் திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதை இயக்குநர் விஷ்ணுவர்தன் உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 படத்தை எப்போ உருவாகும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷ்ணுவர்தன் " பில்லா 3 வராது. ஆனால் வேற ஒரு படம் பண்ணலாம். நான் அஜித் சார் யுவன் ஷங்கர் ராஜா எங்கள் மூவர் கூட்டணியில் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. " என தெரிவித்துள்ளார்.