சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இந்நிலையில், யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மத குருமார்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்லாமியர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகின்றனர். பின்னர், மனதில் தோன்றிய பாவத்தை எல்லாம் செய்கிறார்கள். இந்து பெண்களை கடத்துகின்றனர்.
பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றவாளிகள். நம் இஸ்லாமிய சகோதரர்கள் பல பாவங்களை செய்கின்றனர். ஆனால், தொழுகை செய்ய வேண்டும் என அவர்கள் கற்பிக்கப்பட்டதால் அதை தவறாமல் செய்துவிடுகின்றனர்" என்றார்.
ராம்தேவ் பேசிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை தூண்டியதாக அவர் மீது இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசியான பத்தாய் கான் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாத்தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
வழக்கு குறித்து பேசிய பதி சௌதான் காவல் நிலைய அதிகாரி பூதாரம், "இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல் செய்தல், எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை தூண்டுவது) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று, பல முறை பேசியிருக்கிறார். குறிப்பாக, கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து அவர் பேசியது பெரும் பிரச்னையை கிளப்பியது.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் 1000 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்திய மருத்து சங்கம் அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.
இது தொடர்பாக கடந்தாண்டு தாக்கல் செய்து மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப், "பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த பேச்சுக்கள் கட்டுப்பாடற்று உள்ளன.
அமெரிக்காவைப் போல இங்கு சுதந்திரம் வழங்கவில்லை. ஆனால், எங்கே கட்டுப்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். ”வெறுப்பு பேச்சில் மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து பேசிய அவர், "ஒருவரை கொல்வதை போன்று வெறுப்பு பேச்சில் பல அடுக்குகள் உள்ளன.
பல விதமாக அதை செய்யலாம். மெதுவாகவும் அல்லது வேறு விதமாகவும் செய்யலாம். சில நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் நம்மைக் கவர்கின்றனர். அரசாங்கம் ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. ஆனால், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். இது ஒரு சாதாரண பிரச்சனையா?" என கேள்வி எழுப்பினார்.