மேற்குவங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனிடையே, சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.


ராம நவமி கொண்டாட்டத்தில் கலவரம்:


ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவ்வாறு நடைபெற்ற ஊர்வலத்தில், கத்தி மற்றும் திரிசூலம் போன்ற பல ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹவுரா நகரின் ஷிப்பூர் பகுதியில் ராம நவமி ஊர்வலம் சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட்டது.


அப்போது அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  ஆனால், கலவரக்காரர்கள் நடத்திய கல் வீச்சில் போலீசாரின் இரண்டு வாகனங்களும், சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளன. இந்நிலையில் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.






முதலமைச்சர் குற்றச்சாட்டு:


அனுமதி வழங்கப்படாத சாலை வழியாக ராமநவமி ஊர்வலம் நடத்தப்பட்டதே, மோதலுக்கு காரணம். வகுப்புக்கலவரங்களை நடத்த வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.  அவர்களது ஊர்வலத்தை யாரும் தடுத்து நிறுத்தவில்லை.  ஆனால் வாள் மற்றும் புல்டோசர்களுடன் ஊர்வலம் செல்ல அவர்களுக்கு உரிமையில்லை. ஆனால் ஹவுராவில் இதைச் செய்ய அவர்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?


அவர்கள் ஏன் ஊர்வலப்பாதையை மாற்றினார்கள், அனுமதிக்கப்படாத சாலை வழியாக சென்று குறிபிட்ட ஒரு சமூகத்தை தாக்குவதற்காகவா? மற்றவர்களை தாக்கி சட்ட தலையீடுகள் மூலம் நிவாரணம் பெறலாம் சிலர் நம்பினால், ஒரு நாள் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவர் என்பதை அறிய வேண்டும். எந்த தவறும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க பாஜகவினருக்கு எப்படி தைரியம் வந்தது?” என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


”கலவரத்திற்கு மம்தா தான் காரணம்”


”மேற்கு வங்க முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான மம்தா பானர்ஜி தான் வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.  மாநிலம் முழுவதும் 10,000 ஊர்வலங்கள் நடத்தப்பட்டபோது, ​​​​அவர் தர்ணாவில் இருந்தார். அவர் காவல்துறை நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய நிலையில், அரசியல் செய்கிறார்” என பாஜக கடுமையாக சாடியுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும், ராம நவமியையொட்டி நடைபெற்ற ஊர்வலங்களில் வன்முறை வெடித்துள்ளது.