விபத்தில் சிக்கிய போயிங் 787 ரக விமானங்கள் இந்தியாவில் 34 இருக்கின்றன என்றும் அவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
போயிங் 787 ரக விமானம் குறித்து எழும் சர்ச்சைகள்:
அகமதாபாத் விமான விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விபத்து குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "உயிர் இழந்தவர்களின் சொந்த கதைகளை கேட்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. பயணிகளின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் செயல்முறையை எளிதாக்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
உடல்களை அடையாளம் கண்டு அந்தந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்காக டிஎன்ஏ பரிசோதனையும் ஒருபுறம் நடைபெறுகிறது. குஜராத் அரசு அதனுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. டிஎன்ஏ சோதனை உறுதி செய்யப்பட்டவுடன், உடல்கள் அந்தந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
இந்தியாவில் எத்தனை இருக்கு தெரியுமா?
மேலும், இந்த செயல்முறையும் விரைவில் முடிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், ஆவணங்கள் மற்றும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். செயல்பாட்டில் எந்த குறைபாடும் இல்லை அல்லது பின்பற்ற வேண்டிய நெறிமுறையில் எந்த குறைபாடும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
நாட்டில் மிகவும் கடுமையான பாதுகாப்பு தரநிலைகள் கடைபிடிக்கப்படுகின்றன. சம்பவம் நடந்ததையடுத்து, போயிங் 787 ரக விமானத்தில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நாங்கள் உணர்ந்தோம். 787 ரக விமானங்களுக்கும் ஆய்வு செய்ய டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் போயிங் 787 ரக விமானங்கள், 34 இருக்கின்றன. 8 ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். உடனடி அவசரத்துடன், அவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன" என்றார்.