அயோத்தியில் ராமர் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 


அயோத்தி ராமர் கோயில் 


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை மையப்பட்டுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயிலில் கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 


நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அயோத்தி ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் கருவறையில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைக்கும் அவர் பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


பொதுமக்கள் வழிபாடு 


இதனிடையே நேற்றைய தினம் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் அயோத்தி ராமர் கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உடைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்ய சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இதில் சில பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. திரும்பும் திசையெங்கும் மக்கள் தலைகளாக காணப்படுவதால் அயோத்தி ராமர் கோயில் வளாகம் களைக்கட்டியுள்ளது. மேலும் பல மொழி பேசும், பல்வேறு மாநில மக்களும் வருகை தருவார்கள் என்பதால் அதற்கேற்றவாறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 






முதல் நாளில் எத்தனை பேர் தரிசனம்? 


இதற்கிடையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தினமும் இரண்டு நேர இடைவெளியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதாவது காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் காலை 7 மணி தரிசனத்துக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3.30 மணி முதல் சாமி தரிசனத்துக்காக குவிந்து வருகிறார்கள். 


இந்நிலையில் நேற்று முதல் நாளில் மட்டும் ஐந்து லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.