உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


ராமர் கோயில் குறித்து புதிய தகவல்:


இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் குறித்து அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ராமர் கோயில் குறித்த மற்றொரு புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 


அதன்படி, 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) சிலை அதன் அசல் இடத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராமர் கோயில் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும் பொருளாளருமான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ், இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து வரிவாக பேசிய அவர், "கோயில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தேர்தலுக்கும் ராமர் கோயில் திறப்புக்கும் தொடர்பில்லை:


2024 ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) சிலை அதன் அசல் இடத்தில் நிறுவப்படும். கோயில் கட்டுவதற்கும் 2024 பொதுத் தேர்தலுக்கும் தொடர்பில்லை. நாங்கள் எங்கள் வேலையை மட்டுமே செய்து வருகிறோம்.


ராம் லல்லாவின் சிலை ஒரு சிறிய கோயிலுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு நீண்ட காலமாக ஒரு பந்தலுக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்தது.  சிலையை அதன் அசல் இடத்திற்கு மாற்றுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. சிலை அதன் அசல் இடத்திற்கு மாற்றப்பட்ட பிறகும் கோயில் பணிகள் தொடரும்.


2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கருவறை, முதல் தளம் மற்றும் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறிவிட்டது. யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய இசை உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு கலாச்சார புரட்சி ஏற்படும்" என்றார்.


வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 


1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது.


தற்போதைய மதிப்பீட்டின்படி, ராமர் கோயில் மற்றும் வளாகத்தின் மொத்த கட்டுமானச் செலவு தோராயமாக 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என ராமர் கோயில் அறக்கட்டளை கணித்துள்ளது. 


சன்னதி மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தள மேல்கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன என அறக்கட்டளை சமீபத்தில் தெரிவித்தது.