ரக்ஷா பந்தன், சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகை. இன்னும் சில நாட்களில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இது இந்துக்களின் பண்டிகை. வடநாட்டில்தான் இது மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக நாடு முழுவதுமே குறிப்பாக தமிழகத்திலும் கொண்டாடப்படுகிறது. 


ரக்ஷா பந்தன்(Raksha Bandhan) பண்டிகையானது, ஷ்ரவன் அல்லது சாவன் (ஆடி) மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிவிடுவர். அவர்கள் நீண்ட ஆயுளுடன், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.


சகோதரிகள் பூஜை செய்து ராக்கி கயிறு கட்டிவிட்டவுடன் பதிலுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருட்களைத் தருவார்கள். அன்றைய தினம் சகோதரி கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பவர்களும் உண்டு.


2022 ரக்ஷா பந்தன் என்று வருகிறது?


இந்த ஆண்டு ரக்ஷா பந்தன், ஆகஸ்ட் 11, 12 நாட்களில் அனுசரிக்கப்படுகிறது. சவன் பெளர்ணமி திதி ஆகஸ்ட் 11 காலை 10.38 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 7.05 மணிக்கு முடிவடைகிறது. இந்தக் காலக்கட்டத்தில் தான் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12 இரவு 8.51 மணியுடன் ரக்ஷா பந்தன் விழா நிறைவு பெறுகிறது. 


பஞ்சாகத்தின் படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ராக்கி கயிறை சகோதரிகள் சகோதரர்களுக்கு அணிவிக்கலாம். 




ரக்ஷா பந்தன் 2022 வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்:


இந்து புராணத்தின் படி மகாபாரதத்தில் ராக்கி பற்றிய குறிப்பு வருகிறது. ஒருமுறை கிருஷ்ண பகவான் தெரியாமல் தனது சுதர்சன சக்கரத்தால் விரலை காயப்படுத்திக் கொள்கிறார். இதைப் பார்க்கும் திரவுபதி உடனடியாக ஒரு துணியைக் கிழித்து விரலில் காயம் பட்ட இடத்தில் கட்டிவிட்டு ரத்தம் வருவதைத் தடுக்கிறார். உடனடியாக பகவான் கிருஷ்ணன் ஒரு வரம் தருகிறார்.  எல்லா தீயவற்றில் இருந்தும் திரவுபதியைக் காப்பேன் என்று வாக்குறுதி தருகிறார். அதன்படி, கிருஷ்ண பகவான் திரவுபதியின் மானத்தை காக்கிறார். சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் தலை குனிந்து நிற்க, கவுரவர்களால் துயிலுரிக்கப்படும் திரவுபதியின் மானத்தைக் காக்க துணியை அளித்துக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ண பகவான். இந்த புராணக் கதைப்படி தான் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா என்றாலே பாதுகாப்பு என்று தான் அர்த்தம்.


ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது ராக்கி கயிறு கட்டும்போது, சகோதரிகள் சகோதரர்களின் நெற்றியில் திலகமிடுகின்றனர். ராக்கி கட்டி அன்பையும், பிரார்த்தனையையும் சகோதரி தெரிவிக்க சகோதரன் பாதுகாப்புக்கான வாக்குறுதியோடு பரிசையும் கொடுக்கிறார். 


ஆனால் நவீன காலத்தில் ரக்‌ஷா பந்தனின் முகமே மாறிவிட்டது. இப்போது பாலினம் கடந்து, உறவுமுறை கடந்து யார் வேண்டுமானாலும் தன் மீது அன்பு, அக்கறை காட்டும் யாருக்கு வேண்டுமானாலும் கட்டும் சூழல் வந்துவிட்டது. ரக்ஷா பந்தன் நாளில் அன்பும், சகோதரத்துவமும் ஓங்கி நிற்கட்டும்.