அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது பஞ்சாப். அம்மாநிலத்தில் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த கேப்டன் அம்ரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக சரண்ஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் சுனில் ஜக்கார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில, சரண்ஜித் தேர்வு செய்யப்பட்டார். இவர் அம்ரிந்தர் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. புதிய முதல்வர் தேர்ந்தெடுப்பதில்,  சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்தக் கருத்து எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து  மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளர். 


சித்து - அமரிந்தர்சிங் இடையேயான பனிப்போரின் முடிவாக இந்த முதலமைச்சர் மாற்றம் ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங்கும் சித்துவுக்கு நெருக்கமானவர் என்பதால் இனி பிரச்னை இல்லை என்றே காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனால் புதிய முதலமைச்சரின் தேர்விலும் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. அது Metoo






புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள  சரண்ஜித் சிங் சன்னி, ஏற்கெனவே Metoo பிரச்னையில் சிக்கியவர். 2018ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக Metoo புகாரில் சிக்கினார். அந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ள பாஜவினர், மீடூ வழக்கில் சிக்கியவரைத்தான் காங்கிரஸ் அடுத்து தேர்வு செய்துள்ளது. பஞ்சாபில் வேறு ஆள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 


காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ள சிலர், சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியது. இப்போது MeToo குற்றவாளியை பஞ்சாபில் முதலமைச்சராக நியமிக்கிறது. காங்கிரஸின் போக்கு என்னவென்றே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.